
“நீ அரசியல்வாதியாக மாறியிருப்பதை உணர்ந்தேன். நீ பெண்ணாகப் பிறந்துவிட்டது அதற்குத் தடையாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம். தங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக, ஆண்கள் சாதித்துள்ள செயல்களைப் போலவே, எத்தனையோ பெண்களும் தீவிரப் பங்கேற்று அரிய பெரிய சாதனைகளை நிறைவேற்றியுள்ளனர். ஒரு சிலர் ஆண்களை விட அதிகமாக சிறந்து விளங்குவதையும் காணலாம். ஆண்-பெண் என்கிற பேதம் ஒரு பெரிய தடை அல்ல. உள்ளத்தில் உறுதி கொண்டுவிட்ட ஒரு பெண்ணின் ஆதிக்கம் ஆணின் வலிமையை விட வலியதாக, பயன்கள் பல தருவதாக அமையும். ஆகவே, உனது முன்னேற்றத்துக்குத் தேவையான வாய்ப்புகள் உனக்காகக் காத்து நிற்கின்றன.” –மோதிலால் நேரு
தன் மகள்கள் கிருஷ்ணா மற்றும் விஜயலட்சுமி பண்டிட் இருவரும் நாட்டு விடுதலைப் போரில் தங்களை ஒப்படைத்து போராடிக் கொண்டிருந்தபோது சிறையில் இருந்தபடி மகள் கிருஷ்ணாவுக்கு மோதிலால் நேரு எழுதிய கடிதத்தின் வரிகள்தான் மேலே காண்பவை.
செல்வ வளம் மிக்க அரண்மனை போன்ற வீட்டில் வழக்குரைஞரும், பெரும் செல்வந்தருமான தந்தை மோதிலால் நேருவுக்கு மகளாக பிறந்து வளர்ந்தாலும் நாட்டுப்பற்று மிகுதியாய் இருந்தவராகவும், தாய்நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் ஓங்கி ஒலித்த குரலாக, இருந்தது விஜயலட்சுமி பண்டிட்டின் குரல்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர அத்தனை வேலைக்காரர்கள் கொண்ட வீட்டில், அறுசுவை உணவு உண்டு, ஆடம்பர வாழ்வை வாழ்ந்து வந்த அப்பெண், தன் குடும்பத்தினரோடு நாட்டு விடுதலைக்காக போராடும் போது மூன்றுமுறை கைது செய்யப்பட்டு புழுக்கம் மிகுந்த சிறைகளில் மூன்று ஆண்டுகளை கழித்துள்ளார்.
சிறைவாசம் துன்பம் மிகுந்ததாக இருந்தாலும் ஒரு பெண் அதனை இயல்பாக ஏற்றுக்கொள்வது என்பது, எப்படிப்பட்ட சூழலில் பிறந்து வளர்ந்தாலும், லட்சியத்தை நோக்கி நடைபோடும்போது துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்பதை பிற பெண்களுக்கும் உணர்த்துவதாக உள்ளது அல்லவா!
விஜயலட்சுமியின் இளமைக்காலம்: ஆனந்த பவனம் என்னும் பெரும் மாளிகையில் ஒரு சிற்றரசர் போல் வாழும் அனைத்து வசதிகளையும் கொண்டவர் காஷ்மீரி பண்டிட் பிரிவைச் சேர்ந்த மோதிலால் நேரு. இயற்கையாகவே நேரு குடும்பத்தினர் ஆங்கிலேயர் போன்ற தோற்றமும், அவர்களைப் போன்றே மிடுக்குடனும் வாழ்ந்தவர்கள். பெயருக்கு ஏற்றார்போல், அழகும், இனிமையான குணமும் கொண்டவர் மோதிலால் நேருவின் மனைவி சொரூபராணி. இவர்களின் மூத்த பிள்ளைதான் நவ இந்தியாவின் சிற்பி என்று பின்னாட்களில் போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு. ஜவஹர்லாலுக்கு பதினோரு வயதிருக்கும் போது அவரின் தாய் சொரூபராணி 1900, ஆகஸ்டு 18-ந் தேதியன்று அழகுச்சிலை போன்ற பெண்குழந்தையை பெற்றெடுத்தார். செல்வ மகளாக, செல்ல மகளாக, அழகு தேவதையாக பிறந்த அக்குழந்தையையும் ‘சொரூபா’ என்றே அழைத்தனர்.
தன் பிள்ளை ஜவஹர் இங்கிலாந்தில் உயர்கல்வி பயிலவேண்டும் என்று எண்ணிய மோதிலால், 1905-ல் தன் மனைவி மற்றும் ஐந்து வயதான மகள் சொரூபாவுடன் இங்கிலாந்து சென்றார். அங்கே ஹாரோ பல்கலைக்கழகத்தில் ஜவஹர் சேர்க்கப்பட்டார். தன் மகளை கவனித்து வளர்க்கவும், கல்வி கற்பிக்கவும் தகுந்த ஆசிரியர் தேவை என்பதை உணர்ந்த மோதிலால் நேரு இங்கிலாந்தில் மிஸ் ஜேன் ஹூப்பர் எனும் பெண்மணியை சொரூபாவிற்கு ஆசிரியராக அமர்த்தினார்.
இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி என்று ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு சொரூபாவின் ஆசிரியரான மிஸ் ஜேன் ஹூப்பருடன் இந்தியா திரும்பினர் மோதிலால் குடும்பத்தினர். மிகுந்த திறமையும், சிறந்த பயிற்சியும், கடமையில் கண்டிப்பும் கொண்ட தன் ஆசிரியரிடம் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றார் சொரூபா. மோதிலால் நேரு ஆனந்த பவனத்தில் நிறைய குதிரைகளை வளர்த்து வந்தார். தன் மகள்கள் சொரூபாவிற்கும், 1907-ல் பிறந்த அவளின் தங்கை கிருஷ்ணாவிற்கும் குதிரைகளை பரிசளித்து வந்தார்.
திருமணம்: காந்தியின் வருகையி்ன்போது அவருடைய செயலாளர் மகாதேவ தேசாயும் உடன் வருவதுண்டு. ஒருமுறை தேசாய் சொரூபாவிடம் ‘மாடர்ன் ரிவ்யூ’ எனும் பத்திரிகையின் இதழ் ஒன்றில் வெளிவந்திருந்த கட்டுரையை வாசிக்கக் கூறினார். கட்டுரையைப் பற்றியும் அதன் ஆசிரியர் ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் பற்றியும் மிகவும் புகழ்ந்து பேசினார். ரஞ்சித் பண்டிட் அறிவாளி, மேதை, கல்கத்தாவில் பாரிஸ்டராக பணியாற்றி வருகிறார், இலக்கியவாதி என்பதையெல்லாம் எடுத்துக்கூறி அவரை சொரூபாவிற்கு அறிமுகமும் செய்துவைத்தார்.
காந்தியின் விருப்பப்படி இந்த அறிமுகமும், அதன்பின்னர் இருவரின் மனமொத்து 1921, மே 10-ல் திருமணமும் நிகழ்ந்தது. காந்தியடிகள், அலி சகோதரர்கள் உள்பட பல தலைவர்கள் வந்திருந்தனர். திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய பெயரை ‘விஜயலட்சுமி பண்டிட்’ என்று மாற்றிக் கொண்டார் சொரூபா. இத்தம்பதிக்கு நயந்தாரா, சந்திரலேகா, ரீட்டா, என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர்.
அரசியல் நுழைவும் போராட்டங்களும்: தன்னுடைய 16- வது வயதிலேயே அரசியல் போராட்டக் களத்தில் நுழைந்தவர் விஜயலட்சுமி. மோதிலால் நேருவின் அண்ணன் மருமகளும், ‘ஸ்திரீ டர்பன்’ எனும் இந்தி பத்திரிகையின் ஆசிரியரும், அனைத்திந்திய பெண்கள் கூட்டமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், சமூக சேவகியுமான ராமேஷ்வரி நேரு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு அரசியல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். தென்ஆப்பிரிக்காவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து அக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு நாட்டில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வந்தார் விஜயலட்சுமி.
தொடர்ந்து தன்னாட்சி இயக்கத்தில் இணைந்து போராட முன்வந்தார் விஜயலட்சுமி. ஆனால் அவரது வயதை கருத்தில் கொண்டு ‘அன்னி பெசன்ட்’ அம்மையார் தன்னார்வலராக மட்டும் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்
திருமணத்திற்குப் பின்னர் ஆனந்த பவனத்திற்கே வந்துவிட்ட கணவர் ரஞ்சித் பண்டிட்டுடன் முதல் பத்தாண்டுகள் இரண்டு முறை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஜயலட்சுமி. ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்ததும் இருவரும் விடுதலைப் போராட்டங்களில் பங்குபெற ஆரம்பித்தனர்.
விஜயலட்சுமி பண்டிட் அனைத்திந்திய பெண்கள் கூட்டமைப்பில் ராஜ்குமாரி அம்ரித்கவுருடன் இணைந்து செயல்படத்தொடங்கினார். “அரசியலும், சமூகநலனும் ஒன்றுக்கொன்று தனிச்சிறப்புடையவை. அதேநேரம் முரணானவை!” எனவே பெண்கள் கூட்டமைப்பின் குறிக்கோள்களை மாற்றவேண்டியதன் அவசியத்தை விஜயலட்சுமி எடுத்துரைத்தார்.
காந்தியடிகளின் கொள்கைகள், போராட்டங்களின்பால் ஈர்ப்பு கொண்ட விஜயலட்சுமி, விடுதலைப் போரில் தன் பங்களிப்பை தீவிரப்படுத்த தொடங்கினார். நேரு குடும்பத்துப் பெண்களான கமலா நேருவும், கிருஷ்ணாவும் ராணுவ வீரர்கள் போல் உடை அணிந்து தொண்டர் பயிற்சி பெற்றனர். இது விஜயலட்சுமிக்கு மேலும் ஊக்கத்தைத் தந்தது.
முதல் பெண் அமைச்சராக விஜயலட்சுமி பண்டிட்: 1936-ல் நடந்த தேர்தலில் லஷ்மணபுரி தொகுதியில் வெற்றிபெற்ற (லக்னோ) விஜயலட்சுமிபண்டிட் கோவிந்தவல்லபபந்த் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சராக பொறுப்பேற்று மிகத் திறம்பட பணியாற்றினார். இந்தியாவிலேயே முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார்.
அயல்நாடுகளில் தூதுவராக பணியாற்றுதல்:
இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு விஜயலட்சுமிபண்டிட் 1947-ல் சோவியத் ஒன்றியத்தின் தூதராக நியமிக்கப்பட்டு 1949 வரை பணியாற்றினார். பின்னர் 1949 முதல் 1951 வரை அமெரிக்கா மற்றும் மெக்சிகோ, 1955 முதல் 1961 வரை அயர்லாந்து மற்றும் 1956 முதல் 1961 வரை ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகுதல்: 1953-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் பெண் தலைவராக விஜயலட்சுமி பண்டிட் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது இந்தியர்களுக்கும், பெண்குலத்திற்கும் பெருமை சேர்ப்பதாக ஆனது. ஐ.நா. பொதுச்சபையின் எட்டாவது கூட்டத் தொடருக்கு அவர் தலைமை தாங்கினார். ஐ.நா. பொதுச் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் விஜயலட்சுமி பண்டிட்தான்.
நெருக்கடிநிலைக்கு எதிர்ப்பு: 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது தனது அண்ணன் நேருவின் மகளும், அப்போதைய பிரதமருமான இந்திரா காந்திக்கு எதிராக விஜயலட்சுமி பண்டிட் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்திரா காந்தியின் முடிவுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுதல்: இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவரான பக்ருதீன் அலி அகமதுவின் திடீர் மறைவைத் தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்கு விஜயலட்சுமி பண்டிட் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால் இறுதியில் நீலம் சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைவு: இந்திய அரசியலிலும், நாட்டு விடுதலையிலும், சமூக முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகித்த விஜயலட்சுமி பண்டிட் டிசம்பர் 1, 1990 அன்று டேராடூனில் காலமானார்.
பெண்கள் மேம்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியதன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கும் பெண்களுக்கும் சிறந்த பாதையை உருவாக்கித் தந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in
Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।