
முதுமையில் ஏற்படும் பல்வேறு உடலியல் மாறுபாடுகளால் உடல் எளிதாக சோர்வை அடையக்கூடும். மேலும் முதுமையை தொற்றிக்கொண்டு வரும் நீரிழிவு, இதயநோய், சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்களால் உடல் மென்மேலும் பலவீனம் அடையும். இத்தகைய நோய்நிலைகளுக்கான உணவு முறைகள் முதுமையை இன்னும் வலுவற்றதாக மாற்றக்கூடும். ஆகவே முதுமையில் இளமைக் காலத்தை விட, இன்னும் சத்தான உணவுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
பாரம்பரியமாக மருந்துக்கு மட்டுமின்றி, உணவுக்கும் பெயர்போன சித்த மருத்துவத்தில் சத்தான உணவுக்கும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. மாறாக அதனை மறந்து, இன்றைய நவீன உலகில் மேற்கத்திய உணவு முறைகளால், மேற்கத்திய உணவு பொருட்களின் மீதும் நாட்டம் அதிகரித்து இருப்பது என்பது நிச்சயம் ஆரோக்கியத்தின் சாபக்கேடு எனலாம்.
பொதுவாகவே முதுமையில் பலரின் உணவு அட்டவணையை (டயட் சார்ட்) பெரும்பாலும் அலங்கரிப்பது கோதுமை சார்ந்த உணவுகள் தான். உணவியல் நிபுணரின் உபதேசத்தை தாரக மந்திரமாக கருதும் முதியவர்கள் ஏராளம். ஏனெனில் காலையில் மூன்று சப்பாத்தி, இரவில் மூன்று சப்பாத்தி, மதியம் கொஞ்சமாய் சோறு என்று கோதுமையை நாடும் அவர்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பேக்கரி கடை பிரட், பிஸ்கெட் முதல் வீட்டில் சப்பாத்தி, உணவகங்களில் ‘பட்டர் நான்’ வரை விதவிதமான கோதுமையின் பரிணாமங்கள் நலக்கேட்டை உண்டாக்கும் என்பது இன்றைய முதியோர் மட்டுமல்ல, இளைய தலைமுறையினரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது உடல் நலத்திற்கு நல்லது. ஏனெனில் உலகில் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களில் எச்சரிக்கை விடப்பட்ட ‘குளுட்டன்’ எனும் வேதிப்பொருளின் முக்கிய ஆதாரம் இந்த கோதுமை தான்.
கோதுமை கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பயன்பாட்டில் இருந்து வந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. இருப்பினும் நம் நாட்டில் 300-400 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கோதுமையின் பயணம் துவங்கி உள்ளது. குறிப்பாக சமீப காலத்தில் அதன் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆராய்ந்து பார்த்தால் அதன் பயன்பாடு அதிகரித்த பிறகு தான், நோய்க்கூட்டங்களும் அதிகரித்து உள்ளது என்று கூறினால் மிகையல்ல.
இன்று பாக்கெட்டுகளில் விற்பனையாகும் பல்வேறு பொருட்களில் குளுட்டன் ஒவ்வாமை பற்றிய எச்சரிக்கை வாசகம் உள்ளதை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அப்படி என்ன தான் செய்யும்? கோதுமையில் உள்ள இந்த குளுட்டன்? என்று உற்றுநோக்கினால் நமது குடலில் சத்துக்களை உறிஞ்சும் வில்லைகளை பாதித்து இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற ரத்தத்திற்கும், எலும்புகளுக்கும் தேவையான சத்துக்கள் உட்கிரகிக்கப்படுவதை தடுத்து நாளடைவில் சத்துக்கள் பற்றாக்குறையை உண்டாக்கும்.
சோ.தில்லைவாணன்
இந்த உண்மை தெரியாமல் உடல் பலவீனம் அடைந்த முதுமைப் பருவத்தில் கோதுமையை நாடுவது மேலும் சத்துக்கள் பற்றாக்குறையை உண்டாக்கி நலக்கேட்டினை உண்டாக்கும். மேலும் நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின் டி சத்தும் உட்கிரகிக்க முடியாமல் போவதால் முதுமையில் மூட்டு வலி இன்னும் சற்று கூடுதலாகும்.
மேலும் குளுட்டன் முதுமையில் சர்க்கரை நோய்க்கு மூலக்காரணமாக இருக்கும் இன்சுலின் தடையை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடியதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நீரிழிவுக்கு மருந்துகளை எண்ணி கணக்காய் எடுத்துக்கொள்ளும் முதியவர்கள் கோதுமையை நாடுவது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தாமல், மாறாக சர்க்கரை அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோயில் அரிசியை விட கோதுமை சிறந்த உணவு இல்லை என்பதை முதியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குளுட்டன் உள்ள உணவுப்பொருட்களை நெடுநாள் எடுப்பது கணையத்தை பாதித்து பின்னாளில் இன்சுலின் பற்றாக்குறையை உண்டாக்கி டைப்-1 நீரிழுவுக்கும் வழிவகுக்கும் என்கின்றன அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள். ஆக, முதுமையில் கோதுமையானது ஆரோக்கியத்தின் ஆணிவேரை அசைக்கும் கொடிய நஞ்சு எனலாம்.
முதுமையில் உண்டாகும் தோல் வறட்சிக்கும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் கரப்பான், சோரியாசிஸ் எனும் காளாஞ்சகப்படை ஆகிய தோல் நோய்களுக்கும் முதல் எதிரி குளுட்டன் அடங்கிய கோதுமை தான். எனவே தோல் வியாதியால் அவதிப்படும் முதியவர்களும் கோதுமையைத் தவிர்ப்பது நல்லது.
குளுட்டன் வேதிப்பொருளால் சேதமடைந்த நமது குடல் உறிஞ்சிகளை சரிசெய்ய கிட்டத்தட்ட 6 முதல் 20 வாரங்கள் வரை ஆகும் என்கின்றன நவீன அறிவியல் ஆய்வுகள். எனவே முதுமையில் மட்டுமல்ல, எக்காலத்திலும் பிட்சா, பர்கர், பாஸ்டா, பிஸ்கேட் ஆகிய குளுட்டன் கொண்ட கோதுமைப் பொருட்களை நாடுவது என்பது பணம் கொடுத்து நோயினை கொள்முதல் செய்வது போன்றது. வேறு என்ன தான் சாப்பிடுறது? டயட்டீசியன் (உணவியல் நிபுணர்) கொடுத்த அட்டவணையில் வேறு உணவு பற்றிய தகவல் இல்லையே? என்ற கேள்வி பலருக்கும் எழும். நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் மறந்து, நவீன உணவு அட்டவணையை கண்மூடித்தனமாக நம்புவதே நமது ஆரோக்கிய இழப்பிற்கு காரணம். கருப்பு கவுனி அரிசியும், மாப்பிளை சம்பா அரிசியும், சிகப்பரிசியும், ரத்த சாலியும், காட்டுயானமும் இன்னும் பல்வேறு ரக பாரம்பரிய அரிசி வகைகள் நமது ஆரோக்கியம் காக்கும் மாணிக்கங்கள்.
பொதுவாகவே பாரம்பரிய அரிசி வகைகளில் உடலுக்கு அத்தியாவசியமான விட்டமின்களான தையமின், நியாசின், வைட்டமின்- பி2 ஆகியனவும், பலம் தரும் தாது சத்துக்களான இரும்பு சத்து, கால்சியம், மக்னேசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகிய அனைத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக, பாரம்பரிய அரிசி வகைகள் சத்துக்களின் கூடாரமாக இருப்பதை நாம் என்றுமே மறந்து விடக்கூடாது.
முதுமையில் எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியதாய் இருப்பது கருப்பு கவுனி அரிசி. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் என எல்லா நோய்நிலைகளிலும் நன்மை அளிக்ககூடியதாய் இருப்பது கருப்பு கவுனி அரிசி.
மருத்துவ குணமளிக்கும் பல்வேறு தாவர வேதிப்பொருட்கள், விட்டமின்கள், தாது உப்புகள் இவற்றின் சங்கமமாய் இருப்பது கருப்பு கவுனி அரிசி. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மிகச்சிறந்த பாரம்பரிய உணவு. முதுமை அடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு உடல் எடையை அதிகரிப்பதை குறைக்க கருப்பு கவுனி அரிசி உதவுவதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.
கருப்பு கவுனியின் கருப்பு நிறம் அல்லது கருஊதா நிறத்திற்கு காரணமாக இருப்பது அதில் உள்ள இயற்கை நிறமி ‘ஆன்தோசயனின்’. அதன் பல்வேறு மருத்துவ தன்மைக்கும் முக்கிய காரணமாக இருப்பது இந்த இயற்கை நிறமிகளே.
மேலும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈ அதில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நம் உடலில் உண்டாகும் ஆக்சிஜன் நச்சுப் பொருட்களுக்கு எதிராக செயல்படும் தன்மை கருப்பு கவுனியில் உள்ள இயற்கை நிறமிகளுக்கும், வைட்டமின் ஈ-க்கும் இருப்பதால் முதுமை வராமல் தடுக்கவும், முதுமையில் ஏற்படும் உறுப்புகளின் சேதாரங்களை தடுக்கவும் இது உதவும். சீனாவில் கருப்பு கவுனியில் உள்ள நிறமிசத்துக்கள் கொண்டு நடந்த ஆய்வின் முடிவுகளில் அவை இதய நோய்கள் வராமல் தடுப்பதாக உறுதி செய்துள்ளனர்.
கருப்பு அரிசியை உணவில் சேர்ப்பது நீரிழிவு, ரத்தக் குழாய் தடிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் மூட்டு எலும்பு தேய்மானம், ஆஸ்துமா, புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் பக்கவாதம் இவற்றை குறைக்க உதவுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் விளக்கி, பாரம்பரிய அரிசிக்கு மணிமகுடம் சூட்டுகின்றன.
அதே போல் சத்துக்கு ஆதாரமான கைக்குத்தல் அரிசியை நாடுவதும் நல்லது. தீட்டப்பட்ட (பாலிஷ்டு) அரிசியில் சத்துக்கள் பெரும்பாலும் இழப்பு ஏற்படுவதாக நவீன அறிவியல் கூறுகின்றது. முதுமையில் சத்துக்கள் இழப்பை ஈடு செய்ய கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி ஆகிய பாரம்பரிய அரிசிகளை நாடுவது நலத்திற்கு வலுசேர்க்கும்.
முதுமையில் ‘பஞ்சந்தாங்கி’ என்று கருதப்படும் கேழ்வரகினை நாடுவதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பஞ்சம் இருக்காது. கால்சியம் நிறைந்த கேழ்வரகும், தினை மாவும், குறைந்த சர்க்கரைச் சத்து கொண்ட கம்பும், சோளமும், வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களும் முதுமையின் ஆரோக்கியத்திற்கு பலம்.
சிறுதானியங்கள் அதிக நார்ச்சத்துக்களை உடையதால் மலச்சிக்கலைப் போக்கும். உடல் கொழுப்பினைக் குறைக்கவும் செய்யும். முதுமையில் மருந்து மாத்திரைகளை குறைத்து, இயற்கை உணவுகளை நாடுவது, ஆரோக்கியத்தின் இமயத்தை அடைவதைப் போன்றது.
அரிசி என்பது வெறும் சக்தி அளிக்கும் உணவாக மட்டுமல்லாமல் சத்தான உணவாக இருக்க வேண்டியது இன்றைய வாழ்வியலில் அவசியம். சத்துக்கள் அடங்கிய உணவு உண்பது நாவிற்கு சுவை, உடலுக்கு ஆரோக்கியம் என்பதைக் கடந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். இதனால் முதுமையில் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் நீங்கி நலமான வாழ்வு மட்டுமின்றி, வளமான வாழ்விற்கும் வழிவகுக்கும்.
மொத்தத்தில், நாம் பயன்படுத்த மறந்த இன்னும் எத்தனையோ நம் பாரம்பரிய உணவுப் பொருட்கள் ஆரவாரமின்றி முதுமைக்காலத்தில் ஆயுளை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. அவற்றை நாடுவது முதுமையில் நலத்தின் தரத்திற்கு தடம் அமைக்கும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।