
தற்கொலை: இது ஒரு மனிதனின் சோகமான முடிவு. குழப்பமான முடிவு. இதன் பாதிப்பு அவருக்கு மட்டுமல்ல. அவரது குடும்பம், சமுதாயம் ஏன் உலகெங்கும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பினை அடைகின்றது. எந்த ஊரும், நாடும் இந்த வலி மிகுந்த உண்மையில் இருந்து முழுமையாய் தப்பிக்க முடிவதில்லை. இதன் காரண காரியங்களை ஆழ்ந்து அறிந்தால் மட்டுமே இதற்குத் தீர்வினை தர முடியும்.
சமீப காலமாக பல தற்கொலை நிகழ்வுகளை நாம் கேட்கின்றோம், படிக்கின்றோம். காரணம் கடன் தொல்லை. இளம் வயதினர், இளம் வயது தாய், தந்தையர், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வது என மன வேதனை தரும் நிகழ்வுகளைக் காண்கின்றோம்.
சமுதாயத்தின் அழுத்தம், சவாலான பொருளாதார நிலை, உடனடியாக சமாளிக்க வேண்டிய சில பொருளாதார சூழ்நிலைகள் போன்றவை உடல், மனம் இரண்டினையும் பாதிக்கின்றன. இதனால் மனிதன் உலகை விட்டே சென்று விடுகின்றான்.
வேலையில்லா திண்டாட்டம், வருமானம் இல்லாமல் சில நாட்கள் கூட சமாளிக்க முடியாத நிலை, உதவ ஒருவரும் இன்மை, பாதுகாப்பின்மை, தன் கடமைகளை முறையாய் செய்து முடிக்க முடியாத நிலை இவை மனிதனின் தன்னம்பிக்கையினை அடியோடு உருக்குலைத்து விடுகின்றன. இதன் முடிவு மனிதன் தற்கொலை என்ற விளிம்பிற்கு தள்ளப்படுகின்றான்.
* சிலர் தன்மான பிரச்சினையின் காரணமாக பிறரிடம் உதவி கேட்க கூசுவார்கள்.
* பலருக்கும் படிப்பே வாழ்வின் மூலாதாரம். இந்த படிப்பிற்காக வாங்கும் கடனை அடைக்க முடியாத போது அது ஆணோ, பெண்ணோ தற்கொலைதான் அவர்களுக்கு முடிவாகத் தோன்றுகிறது.
* விவசாயிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஊருக்கு நன்மை செய்து தன்னை அழித்துக் கொள்ளும் மெழுகுவர்த்திகள் ஆகி விட்டனர்.
* கடனால் வரும் குடும்ப பிரச்சினைகள், உறவுகளில் விரிசல் போன்றவை ஒருவரின் மன நலத்தினை பைத்தியமாக்கி வேடிக்கை பார்க்கின்றது.
* ஏறி இறங்கும் மார்க்கெட் மற்றும் பொருளாதார நிலவரம்.
* முறையாக எப்படி கடன் பெறுவது, அதனை அடைப்பது என்ற படிப்பின்மை.
* கடன் வாங்கி உல்லாச வாழ்க்கை தேடும் பேராசைகள்.
* கடனை திரும்ப கட்ட முடியாமல் ஏற்படும் அவமானம் என்று காரணங்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. தீர்வு தான் தேட வேண்டி உள்ளது.
* உலகில் 5 நபருக்கு ஒருவராவது வாழ்வில் ஒரு முறையேனும் சில நிமிடங்களாவது தற்கொலை செய்யலாமா? என்று நினைக்கின்றனர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
கமலி ஸ்ரீபால்
* சிலர் நினைப்பதற்கு காரணம் அவர் இருக்கும் அந்த சூழ்நிலையில் தப்பிப்பது கடினமாக இருக்கின்றது அல்லது உதவி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இவர்களுடன் பேசும் போது அவர்கள் மன உளைச்சலை கொட்டி விட்டாலே சிறிது நிம்மதி பெறுவர்.
வேகம், கோபம் போன்ற உணர்ச்சிகள் அப்படியே இருக்காது. கால நேரங்கள் கண்டிப்பாய் அனைவருக்கும் மாறும்.
வாழ்க்கையினை அர்த்த முள்ளதாக வாழ்ந்து காட்டுவதே மாபெரும் திறமைதான்.
வாழ்வில் அவர் செய்யும் தவறால் உலகம் அவரை சுட்டிக்காட்டி பேசக் கூடாது. அந்த தற்கொலை பண்ணி கிட்டு போனாரே என ஒரு வரையோ, அல்லது குடும்பத்தினையோ மற்றவர்கள் ஏளனமாய் பேசும்படி சொல்லக் கூடாது.
காலம் வலிகளை ஆற்றும். வருங்காலம் பற்றி யாருக்குத்தான் தெரியும்? நம்பிக்கையோடு தான் வளர்கிறான், படிக்கிறான், வேலை செய்கிறான், திருமணம் புரிகின்றான். ஆக நம்பிக்கையே வாழ்க்கை.
நீங்கள்…. நீங்கள்…. நீங்கள்… மிக முக்கியம். விவேகானந்தரின் சில கருத்துகளுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒருவர் தன்னைத் தானே பலவீனமானவராக எண்ணக் கூடாது. பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியத்துடன் இருக்க வேண்டும். பிரச்சினைகளில் இருந்து ஓடி ஒளிவது எந்த பலனையும் தராது.
எதனையும் விடா முயற்சியுடன் தொடர வேண்டும். எழுந்திரு, விழுத்திரு, உன் இலக்கினை அடையும் வரை நிறுத்தாதே.
உங்களை நீங்கள் முதலில் நம்ப வேண்டும்.
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து சக்திகளும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. நம் கண்களை நாமே நம் கைகளால் மறைத்துக் கொண்டு இருட்டாய் இருக்கின்றது என அழுகின்றோம்.
ஒருவர் வாழ்க்கையில் போராடினால் மட்டுமே வளர முடியும்.
பிரச்சினை இல்லாமல் ஒருநாள் சென்றால் அன்று நாம் தவறான பாதையில் செல்வதாக இருக்கும்.
சுயநலம் இல்லாது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
எதிர்பார்ப்புகள் இல்லாத, சுயநலம் இல்லாத வாழ்வே மகிழ்ச்சி தரும்.
உங்கள் வாழ்க்கையில் உங்கள் முறையில் நீங்கள் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். நல்லவைகளை அனைவரிடம் இருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக அவராக நாம் மாற வேண்டாம். நாம் நாமாக கற்ற திறமைகளோடு சிறப்பாக இருப்போம்.
தினமும் சிறிது நேரம் சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். அன்றாடம் ஒவ்வொருவரும் அவருடனேயே சிறிது நேரம் பேச வேண்டும். இல்லையெனில் உலகின் மிகச் சிறந்த அறிவாளியுடன் பேசும் வாய்ப்பினை ஒருவர் இழக்கின்றார்.
நேர்மை தான் மனிதனின் முக்கிய குறிக்கோள். உண்மைக்காக எதனையும் இழக்கலாம். ஆனால் உண்மையினை, நேர்மையினை எதற்காகவும் இழக்கக் கூடாது.
(பலர் தற்கொலை முயற்சியினைத் தவிர்த்து வாழ்வினை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அதற்கு கூறும் விளக்கங்கள் பெயர் குறிப்பிடப்படாமல் தொகுத்து கூறப்பட்டுள்ளது)
* நான் இவ்வுலகில் இருக்கின்றேன். ஏனெனில் இவ்வுலகை விட்டுச் செல்லும் தயார் நிலையில் இல்லை.
* நான் தொடர்ந்து வாழ்வதன் காரணம் வாழ்வும், அன்பும் இங்கே கிடைப்பதை நான் இழக்க விரும்பவில்லை.
* பிறருக்கு கற்பிக்கும், காப்பாற்றும் சிறந்த நிலையில் நான் இருக்கின்றேன்.
* என் நண்பனின் தம்பி தற்கொலை செய்து கொண்டதால் அந்த குடும்பம் படும் பாட்டினை கண்ணால் கண்ட நான் அதே தவறினை செய்ய முற்படவில்லை.
* என் வாழ்வின் அர்த்தம் எனக்கு புரிந்து விட்டது.
* என் குடும்பத்திற்காக நான் வாழ்கின்றேன்.
* நான் எனக்காக வாழ்கின்றேன்
* பல சவால்களை சந்தித்து ஜெயிக்க விரும்புகின்றேன்.
* பெரிய குறிக்கோள், முயற்சி இல்லை. ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக வாழ்கின்றேன்.
* மீண்டும் வாழ கிடைத்த 2-வது வாய்ப்பு. இதனை நான் இழக்க மாட்டேன்.
* நான் என்னவாக மாறப் போகின்றேன் என்று நானே காண ஆசைப்படுகின்றேன்.
இப்படி ஒவ்வொரு தற்கொலை முயற்சிப்பவர் மனதிலும் ஆக்கப்பூர்வமான சிந்தனை எழாதா என்ன?
நான் தற்கொலை செய்தால் என்ன? என் உயிர், என் உரிமை என்று வாக்குவாதம் செய்யலாம். தெரிந்த இந்த உலகில் பழகிய மக்கள் உள்ள சூழ்நிலையில் ஒன்றும் தெரியாத ஒரு இடத்திற்கு ஏன் அவசரப்பட்டு வாழ்வை முறித்து செல்ல வேண்டும். இயற்கையின் போக்கினை ஏன் சீண்டி பார்க்க வேண்டும். விரலுக்குத் தகுந்த வீக்கமாக ஏன் ஆசைப்பட வேண்டும். உலகிற்கே சோறு போடும் விவசாயிகளா நீங்கள்? கடன் பட்டார் நெஞ்சம் என்று சொல்லுவது போல் புதை குழியில் கால் விட்டு திண்டாட வேண்டாம். எந்த ஒரு மனிதனும் இங்கு நிம்மதியாய் வாழ்ந்து விடுவதில்லை. கந்து வட்டி கதைகளை பல கேட்ட பின்பும் சுழலில் சென்று மாட்டக் கூடாது. சிந்திக்கும் திறனும் பொறு மையும் பல பிரச்சினைகளை தீர்க்கும்.
இது ஒரு பொதுவான ‘தற்கொலை’ தடுப்பு முயற்சிக்கான கட்டுரை. அவரவர் வாழ்வின் வலி அவரவரே அறிவர். இருப்பினும் மனநல மருத்துவர் ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும். நாட்டுக்கு நாடு போட்டி போட்டு கடனாளியாகத்தான் இருக்கின்றது. பிறப்பே நம் கடனை தீர்ப்பதற்குதான் என ஆன்மீக உலகில் கூறுவர்.
பலம்தான் வாழ்க்கை. பலவீனம் இறப்பு. ஆக்கப்பூர்வம் என்பது வாழ்க்கை. அழிவுப்பூர்வம் என்பது இறப்பு. அன்பு என்பது வாழ்க்கை. வெறுப்பு என்பது இறப்பு. ஒருவர் தற்கொலை செய்ய வேண்டும் என எண்ணவே கூடாது. காரணம்
* நீங்கள் முக்கியமானவர் * நீங்கள் புத்திசாலி * நீங்கள் பொக்கிஷம் * உங்கள் உறவுகளுக்கு நீங்கள் வேண்டும் * வேறு ஒருவர் நீங்கள் ஆக முடியாது * உலகில் காண வேண்டிய இடங்கள் உள்ளன. எனவே ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று உணருவோம்.
Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।