Blog

Article : அச்சுறுத்தும் டெங்குக்கு சித்த மருத்துவத் தீர்வுகள்

சமீப காலமாக தமிழகத்தை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சல் மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. டெங்கு வைரஸ் கிருமிக்கு நேரடியான எதிர் மருந்துகள் இல்லாததும், தடுப்பூசி மருந்துகள் இல்லாததுமே இதற்கு முக்கிய காரணம். ஆகவே டெங்கு காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வு இறப்புக்களைத் தவிர்ப்பதற்கு அவசியமாகின்றது.

கடந்த 50 ஆண்டுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 30 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சியான தகவலைத் தெரிவிக்கின்றன. அதிலும் வெப்பமண்டல நாடுகளில் டெங்கு அதிகம் காணப்படுவதாக குறிப்பிடுகின்றன. திடீரெனெ ஏற்படும் மழையும், அதனால் மாறுபடும் சீதோஷண நிலையும், இந்த டெங்கு வைரஸ் பரவுவதற்கான சூழலை உண்டாக்குகின்றன.

சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன. இதில் 2-5 சதவீதம் பேர் கடுமையான நோய்நிலையை அடைகின்றனர். டெங்கு பரவுவதற்கு கொசுவின் அடர்த்தி, மக்கள் தொகை அடர்த்தி, டெங்கு வைரஸ் கிருமிகளின் இணை சுழற்சி, மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதம் போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

டெங்கு காய்ச்சலும், குறிகுணங்களும்:

டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ் தாக்கத்தினால் உண்டாவதாக இருப்பினும் ‘ஏடிஎஸ்’ எனப்படும் பகல் நேரங்களில் கடிக்கும் பெண் கொசுக்களினால் பரவுகின்றது.

சுரம், அதீத உடம்பு வலி, வாந்தி, வாய் குமட்டல், வயிற்று வலி, கண்ணுக்கு பின்பக்க வலி, பசியின்மை, தசை வலி, எலும்பு வலி, உடல் சோர்வு ஆகியன இந்நோயின் குறிகுணங்களாக உள்ளன. சுரம் விட்ட பின் ஏற்படும் அதிகப்படியான தசை வலி, உடம்பு வலி மிக முக்கிய அறிகுறியாகும். அதிகப்படியான வாந்தியும், வாய்குமட்டலும் நோயின் தீவிர நிலைக்கு வெகு விரைவில் கொண்டு செல்லும்.

ஏடிஎஸ் கொசு கடித்து 3 -10 நாட்களில் நோயரும்பும் (இன்குபேஷன்) காலமாக உள்ளது. அதற்கு பின் குறிகுணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று நாள் சுரம் காய்ந்து, அதன்பின் நான்காம் நாள் தொடங்கி ரத்த தட்டணுக்கள் குறையத் துவங்கும். தட்டணுக்கள் குறைவதனால் உடலில் ரத்தம் கசிய துவங்கும். ரத்தபோக்கினை ஏற்படுத்தும். தோலில் ரத்த கசிவு அதனால் தடிப்பு, சில பேருக்கு பல் ஈறில் இருந்து அதிக ரத்தம் கசிதல், சிறுநீரில் ரத்தக்கசிவு, பெண்களுக்கு அதிக மாதவிடாய் ஆகிய குறிகுணங்கள் தோன்றக்கூடும்.

காய்ச்சல் துவங்கிய முதல் மூன்று நாட்களில் சுரத்துடன் நீர்சத்து இழப்பு இருக்கும். அடுத்து மூன்று நாட்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதும் அதனால் குருதிப்போக்கு, மயக்கம், முக்கிய உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைபாடு ஆகிய குறிகுணங்கள் ஒன்று சேர்ந்து நோயின் தீவிர நிலைக்கு கொண்டு செல்லும். முறையான சிகிச்சை மூலம் இந்த நாட்களை கடந்தால் அடுத்து நோயின் மீட்பு நிலைக்கு சென்று இயல்பான நிலைக்கு திரும்பலாம்.

பொதுவாக ரத்த பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், மற்றும் தட்டணுக்கள் ஆகியன வைரஸ் காய்ச்சலில் குறையக்கூடும். மேலும் டெங்குவை எலிசா பரிசோதனை செய்து உறுதி செய்துக் கொள்ளலாம்.

டெங்குவை உறுதி செய்த பின்னர் 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை பரிசோதனை செய்தல் அவசியம். முழு நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது மிக மிக அவசியம். மேலும் மிக முக்கியமாக ரத்தப் பரிசோதனையில் ‘பி.சி.வி’ எனும் குறியீடு அதிகரித்தால் ‘டெங்கு ஷாக்’ குறிகுணங்கள் தோன்றக்கூடும். அத்துடன் தட்டணுக்கள் சேர்ந்து குறைந்தால் ‘டெங்கு ஹெமரேஜிக் ஷாக்’ ஏற்படக்கூடும். இந்நிலைகளில் சிகிச்சை அளிக்கத் தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

சரியான நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, நோய் கணிப்புச் செய்து சிகிச்சை மேற்கொண்டால் நோயின் தீவிர நிலையில் இருந்து காத்துக்கொள்ளலாம். நீர்ச்சத்து அதிகம் இழக்கப்படுவதால் திரவ மேலாண்மை மிக அவசியம். நீர்ச்சத்து மிகுந்த கஞ்சி, பழச்சாறுகளை அதிகம் தரலாம். தட்டணுக்களை அதிகரிக்க வைட்டமின்-சி நிறைந்த பழச்சாறுகளை ஒரு மணிக்கொரு முறை கொடுத்து வரலாம்.

டெங்கு காய்ச்சலும், சித்த மருத்துவமும் :

சித்த மருத்துவத்தில் 4448 வியாதிகள் வாதம், பித்தம், கபம் இவற்றின் அடிப்படையில் அகத்திய மாமுனிவரால் கூறப்பட்டுள்ளன. இன்றைய நவீன மருத்துவம் கூறும் டெங்கு காய்ச்சலின் குறி குணங்களும், நோய்நிலையும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ‘பித்த சுரம்’ என்பதுடன் ஒத்துப் போவதால், பித்த சுரத்துக்கான மருத்துவ முறைகளும், பித்தத்தை குறைக்கும் படியான கசப்பு தன்மையுடைய சித்த மருத்துவ மூலிகைகளும் பயன் தரக்கூடியதாக உள்ளன. இதனை சமீபத்திய ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.

நிலவேம்பு, ஆடாதோடை, பப்பாளி இலை, சீந்தில், வேப்பிலை, மலைவேம்பு இவற்றாலான மருந்துகள் பித்தத்தைக் குறைத்து நோயினை தீர்க்க உதவும். இந்த மூலிகை மருந்துகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உடையதால் கிருமிகளுடன் போராடும் திறத்தையும் உடலுக்கு அளிக்கும்.

உலக அளவில் பிரபலமான சித்த மருந்தான ‘நிலவேம்பு குடிநீர்’ வைரஸ் சார்ந்த பல்வேறு நோய்த்தொற்றுக்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரில் சேரும் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தானம், பேய்புடல், கோரைக்கிழங்கு, பற்பாடகம், சுக்கு, மிளகு ஆகிய பல்வேறு மூலிகைச் சரக்குகள் டெங்கு காய்ச்சலில் உண்டாகும் குறிகுணங்களை குறைப்பதுடன் நோய்க்கு காரணமாகும் வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் தன்மையும் உடையன. முக்கியமாக நிலவேம்பில் உள்ள ‘ஆன்ரோகிராபோலாய்டு’ எனும் வேதிப்பொருள் வைரஸ் கிருமிக்கொல்லித் தன்மைக்கு காரணமாகின்றது.

சித்த மருந்தான ஆடாதோடை மணப்பாகினை 10 -15 மிலி வெந்நீருடன் ஒரு நாளைக்கு மூன்று முறை கொடுக்கலாம். நிலவேம்பு குடிநீருடன், ஆடாதோடை மணப்பாகு சேர்த்து டெங்கு நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் ரத்தத்தில் தட்டணுக்கள் அதிகரிப்பதையும், நோய் விரைந்து குணமாக இம்மருந்துகள் துணை நிற்பதையும் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் உறுதியாக தெரிவிக்கின்றன.

கசப்பு சுவையுடைய பப்பாளி இலையில் மருத்துவ குணமிக்க எண்ணற்ற வேதிப்பொருட்கள் உள்ளன. அல்கலாய்டுகள் இயற்கை நிறமிகள், குர்சிட்டின், கேம்ப்பெரால் ஆகியன குறிப்பிடத்தக்கவை. குர்சிட்டின், பப்பைன், கைமோபப்பைன் ஆகியன அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய காரணமாகின்றன. இது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எனும் தட்டணுக்கள் குறைவதை தடுப்பதாகவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாகவும், வெள்ளையணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பப்பாளி இலைச்சாறு 10 மிலி மூன்று வேளை கொடுக்க நல்ல பலன் தருவதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. எனவே மருத்துவர் ஆலோசனைப்படி நிலவேம்பு, ஆடாதோடை இவற்றுடன் பப்பாளி இலைச் சாற்றினை எடுத்துக்கொள்வது டெங்கு நோய் சிகிச்சையில் நல்ல பலன் தரும்.

காலம் காலமாக அம்மைத் தொற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ‘வேப்பிலை’ டெங்கு வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுவதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. வேப்பிலையில் உள்ள ‘அசாடிராக்டின்’ எனும் வேதிப்பொருள் அதன் கிருமிகொல்லித் தன்மைக்கு காரணமாக உள்ளது. வேப்பிலையானது டெங்கு வைரஸ் பல்கி பெருகுவதை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு. அதே போல் ‘பொன்முசுட்டை’ எனும் சித்த மருத்துவ மூலிகை டெங்கு வைரசின் நான்கு வகை பிரிவுகளிலும் அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

‘அமிர்தவல்லி’ எனப்படும் ‘சீந்தில்’ மூலிகையை ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுக்கலாம். இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், ரத்தத்தில் தட்டணுக்கள் அதிகரிக்கும் தன்மையும், வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் தன்மையும் உடையது. இதில் உள்ள ‘டினோஸ்போரின்’ எனும் முக்கிய தாவர வேதிப்பொருள் அதன் மருத்துவத் தன்மைக்கு காரணமாக உள்ளது.

மூலிகைகளைத் தவிர அன்னபேதி செந்தூரம், அய செந்தூரம், அயகாந்த செந்தூரம், பவள பற்பம், சங்கு பற்பம் போன்ற பல்வேறு மருந்துகள் பித்தத்தைக் குறைத்து டெங்குவின் பின் விளைவுகளில் இருந்து காப்பதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தடுப்பு முறைகள் :

டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் தேங்கிய சுத்தமான நீரில் தான் உற்பத்தி ஆகின்றன. முக்கியமாக மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களை சோதனை செய்து அதனை நீக்குவது நல்லது. வீட்டிலும் நல்ல நீரினை சேமித்து வைக்கும் போது மூடிவைக்க வேண்டும். கொசு கடிக்காமல் இருக்க முழு சட்டைகளை பயன்படுத்தலாம்.

இயற்கை கொசு விரட்டிகளாக வேப்பிலை, நொச்சி இலை புகை போடலாம். தினமும் குளிப்பது கொசுக்கள் நம்மை அண்டாமல் தடுக்கும். சுத்தமான அழுக்கில்லாத உடைகளை உடுத்துவது நல்லது. கற்பூராதி தைலம் எனும் சித்த மருந்தை கொசு கடிக்காமல் இருக்க மேலே பூசிக்கொள்ளலாம். முறையான தடுப்பு நடவடிக்கைகளும், நோயினை பற்றிய விழிப்புணர்வும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடுவதும், டெங்குவில் இருந்து நம்மை காக்கும் ஆயுதங்கள்.

ஆண்டுதோறும் இந்தியாவில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெங்குவால் பாதிக்கப் பட்டு மீண்டு வந்தவர்க ளின் துன்பத்தை வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது. அதே போல் டெங்கு காய்ச்சலில் சிகிச்சை பலனின்றி இறப்போர்களின் இழப்பும் ஏற்கக்கூடியது அல்ல. இத்தகைய அச்சுறுத்தலான சூழ்நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவமாக சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தி இறப்பினைத் தடுத்து, சமூக நலன் காப்பது, இன்றைய தருணத்தில் அவசியமான ஒன்று.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button