Blog

Article : கூட்டு தொழிலும் வெற்றி வாய்ப்பும்

மனிதர்களின் அடிப்படை தேவைகள் உணவு, உடை இருப்பிடம். இதை நிறைவு செய்ய தொழில் மிக அவசியம்.

ஒருவருக்கு பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் ஆகியவற்றை வழங்குவதில் உத்தியோகத்தை விட தொழிலே முன்னிலை வகிக்கிறது. சொந்த தொழில் மூலமாக பணம் ஈட்டுவதில் 2 வகை உண்டு. முதல் வகை முதலீட்டை மூலதனமாகக் கொண்ட தொழில், இரண்டாவது வகை மூளையை மூலதனமாக கொண்ட தொழிலாகும். மூளையை மூலதனமாக கொண்ட தொழிலில் இடர்கள் குறைவு. குறைந்த உழைப்பில், நிறைந்த வருமானம் கிடைக்கும். ஆனால் முதலீட்டை மூலதனமாகக் கொண்ட தொழிலில் இடர்கள் அதிகம். கடினமாக உழைக்க வேண்டும். முதலீடு அதிகமாக தேவைப்படும்.

தொழில் இடர்களை குறைக்கவும் மூல தனத்தை அதிகரிக்கவும் பலர் கூட்டுத் தொழிலை விரும்புகிறார்கள். சுய தொழிலில் முதலாளியாக கொடிகட்டி பறந்த பலர் கூட்டுத் தொழிலில் உலக அளவில் பிரபலம் அடைகிறார்கள்.

சிலர் ஒரு குறிப்பிட்ட காலம் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கிறார்கள். பிறகு இருந்த இடம் தெரியாமல் போகிறார்கள். கூட்டுத் தொழில் யாருக்கு சிறப்பான யோகத்தைத் தரும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

தொழில் ஸ்தானம் எனப்படும் 10ம் பாவகத்தின் மூலம் பொருளாதாரம் பெற வெற்றி பெற அவருடைய ஜாதகம் கீழே குறிப்பிட்டுள்ள நிலைகளில் உதவி புரிய வேண்டும்.

லக்னம்

ஜாதகரை குறிக்கும் லக்னம், லக்னாதிபதி வலுவாக இருந்தால் ஜாதகரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு யோகமும் லக்னம், லக்னாதிபதியோடு சம்பந்தப்படும் போது மட்டுமே அந்த யோகம் முழு யோகத்தை தரும். லக்னம் எந்தளவுக்கு வலுத்திருக்கிறதோ அந்தளவுக்கு ஜாதகனது உயர்வு இருக்கும்.

லக்னத்திற்கான காரக கிரகம் சூரியன். சூரியன் ஆத்ம காரகன். எனவே ஜாதகத்தில் சூரியன் பலம் பெற வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தனது சுய சிந்தனையுடன் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய நபராக இருப்பார். அதே போன்று லக்னம் பலமாக அமைந்தால்தான் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும்.

தன ஸ்தானம்

இரண்டாம் பாவகம் எனும் தனம், வாக்கு ஸ்தானம் பலம் பெற்ற ஒருவரே தனது சாமர்த்தியமான இனிமையான பேச்சால் அனைவரையும் கவர முடியும். வாக்கு சாதுர்யம் இல்லாதவர் ஒருவரால் தொழில் செய்ய முடியாது. தன ஸ்தானத்திற்கு லக்ன தொடர்பு இருந்தால் தொடர் தன வரவு இருந்து கொண்டே இருக்கும். சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற அறிவும், மேலும் பணம் மென்மேலும் வரக்கூடிய வழிகளை பெருக்கக்கூடிய சுயசிந்தனையும் இருக்கும். இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் பேச்சுத் திறமை இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. பொருள் வரவில் ஏற்ற இறக்கம் நிலவும்.

உப ஜெய ஸ்தானம் (3, 6,11)

லக்ன பாவத்தின் பாவத் பாவம் 3-ம் பாவகம். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற விடாமுயற்சி வேண்டும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது பழமொழி. முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் என்பது புதுமொழி. முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும்.

ஆறாம் பாவகம் என்றால் அனைவருக்கும் கடன், நோய், எதிரி மட்டுமே ஞாபகம் வரும். அதாவது ஆறாம் பாவகம் எனும் பொருள் கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3-ம் பாவகம்) தொழில் செய்து (10-ம் பாவகம்) லாபம் (11-ம் பாவகம்) எனும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

இதையே வேறு விதமாக சொன்னால் பொருள் கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட, உழைக்க முயற்சி செய்து லாபம் ஈட்டுவார். ஒருவருக்கு எல்லாவிதமான வாழ்வியல் வெற்றியைப் பெற்றுத் தருவது ஆறாம் பாவகமே.

அப்படியென்றால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம் தானே. அது கெட்ட பாவகம், நோய், கடன் என்று பயப்படுகிறார்கள். வாங்கிய கடனை திரும்பச் செலுத்தினால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம் தான். வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாதவர்களுக்கு ஆறாம் பாவகம் சாபம்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஜாதகருக்கு போட்டி மனப்பான்மையும், எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறக்கூடிய அமைப்பும், கடன் மூலம் பொருளாதாரம் ஈட்டக்கூடிய தன்மையும் மற்றும் பணம் கொடுத்தல் வாங்களில் புத்தி சாலித்தனமும் அமைய வேண்டும்.

எதிர்பார்த்த லாபத்தை அடைய லக்னத்திற்கு 11-ம் பாவகமும் அதன் அதிபதிகளும் பலம் பெறுவதன் மூலம் பெரும் பணவரவு சிறப்பாக இருக்கும். 6,11-ம் பாவகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தொழிலுக்கு தேவையான முதலீட்டை திரட்ட முடியும்.

தொழில் ஸ்தானம் (10-ம் பாவகம்)

10-ம் இடம், 10-ம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10-க்குடையவன் நின்ற ராசி , சனிக்கு 10-ம் இடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலைத் தீர்மானிக்கிறது.

10-ம்மிடம் பலம் பெற்று 10-ம் அதிபதிக்கு கேந்திர திரிகோண சம்பந்தம் இருந்தால் சொந்த தொழில் செய்யலாம். 10-ம் இடத்தை குரு போன்ற சுப கிரகம் பார்க்க வேண்டும் அல்லது 10-ம் அதிபதியை குரு பார்க்க வேண்டும்.

10-ம் அதிபதி உச்சம் பெற்று சுப கிரகத்தால் பார்க்கப்பட்டாலும் 10-ம் மிடத்தில் உச்சம் பெற்ற சுப கிரகங்கள் இருந்தாலும் தொழிலால் செல்வாக்கு புகழ் பெறுவார்கள். தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.

2,11 அதிபதிகள் பலம் பெற்றால் சொந்தத் தொழில் செய்யலாம் பெரும் லாபம் கிடைக்கும்.

10-ம் அதிபதியானவர் தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று, நட்பு கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைந்தால் தொழில் ஸ்தானம் வலுப்பெறும். தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் எத்தனை கிரகங்கள் பலம் பெற்று நிற்கின்றதோ, அத்தனை தொழில்கள் செய்யக்கூடிய வாய்ப்பு அமையும். அதுபோல 10-ம் அதிபதி எத்தனை கிரக சேர்க்கை பெற்று பலம் பெற்றிருக்கிறதோ அத்தனை விதமான தொழில்கள் செய்யக்கூடிய யோகமும் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திரம்

ஜனன கால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும் ஒருவர் தன் தொழிலை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே தொழிலில் வெற்றி பெற முடியும். அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத்துவத்தை பெறுகிறது.

சனிபகவான்

10-ம் அதிபதியை மட்டும் வைத்து ஒருவரின் தொழிலை நிர்ணயிக்க முடியாது . அதற்கு வலு சேர்ப்பது தொழில் காரக கிரகம் சனி. ஒருவருடைய ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் தொழில் நன்றாக இருக்கும். சனியோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவ தொழிலே ஜாதகனுக்கு அமையும். சனியோடு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் எந்த கிரகத்தின் தொழிலை ஜாதகர் செய்தால் மேன்மை அடைய முடியும் என்ற சந்தேகம் தோன்றும். ஷட் பல நிர்ணயத்தில் எந்த கிரகம் வலிமை பெறுகிறது என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். வலுவான கிரகத்தின் காரகத்துவ தொழில் ஜாதகரை இயக்கும். வலுவற்ற கிரகங்களின் காரகத்துவ தொழில் உப தொழிலாக அமையலாம்.

கூட்டுத் தொழில்

மேலே கூறியுள்ள அனைத்தும் ஒரளவுக்கு சாதகமாக இருந்தால் சுய தொழில் புரியமுடியும். முதலீட்டையும், லாபத்தையும் அதிகரிக்க சிலர் கூட்டுத் தொழில் செய்ய விரும்பலாம். ஏழாம்பாவம் என்பது கூட்டுத் தொழிலையும், பொதுஜன தொடர்பையும் குறிக்கும். கூட்டுத் தொழில் செய்து பொருள் ஈட்டக் கூடிய அமைப்பு ஜோதிட ரீதியாக சிலருக்கு மட்டுமே அமைகிறது. ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 10-ம்மிடம் தொழில் ஸ்தானமாகும். 10-க்கு, 10-ம் இடமான 7-ம் பாவகம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் கூட்டுத் தொழில் கைகொடுக்கும். 10,7-ம் அதிபதிகளுக்கு கேந்திர, திரிகோண சம்பந்தம் இருந்தாலும் 10,7-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும் கூட்டுத் தொழில் மூலம் அபரிமிதமான பொருள் சேர்க்கை கிடைக்கும். 7-ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவதுடன் 10-ம் அதிபதியுடன் இணையும் பலம் பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கேற்ற நபர்கள் தொழில் ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு 7-ம் பாவகம் வலிமையாக இருக்கும். 10-ம் இடமான தொழில் ஸ்தானம் பலம் குறைவாக இருக்கும். பண பலம் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கும் கூட்டுத் தொழில் சிறக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும் அமைப்பை பெற்றிருந்தாலும் ஜாதகரீதியாக யாருடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யலாம் என்ற கேள்வியும் இங்கே எழும்.

2,7,10-ம் அதிபதிகள் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

10,7-ம் அதிபதிக்கு சூரியன் அல்லது 9ம் அதிபதி சம்பந்தம் பெற்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளுடனும் தொழிலுக்காக கூட்டுச் சேருவார்கள்.

10,7-ம் அதிபதிக்கு 4-ம் அதிபதி அல்லது சந்திரனுடன், புதன் தொகுப்பு இருந்தால் தாய் மற்றும் தாய்வழி உறவுகளுடன், தாய் மாமாவுடன் தொழில் இணைவு உண்டு.

10,7-ம் அதிபதிக்கு குரு, செவ்வாயும் 3,11-ம் அதிபதி சேர்க்கை பெற்றால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அல்லது மாமனாருடன் இணைந்து கூட்டு தொழில் நடத்துவார்கள் 10, 7-ம் அதிபதிக்கு புதனுடன் கூட்டு இருந்தால் நண்பர்களை பங்காளிகளாக இணைக்கலாம் 5,7,10-ம் பாவகங்கள் மற்றும் குரு சம்பந்தம் இருந்தால் பிள்ளைகளுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள்.

10,7-ம் அதிபதிக்கு சுக்ரன் தொடர்பு இருந்தால் தம்பதிகள் இணைந்து தொழில் கூட்டு அமைக்கலாம் அல்லது மனைவி வழி உறவினர்களுடன் இணைந்து தொழில் நடத்தலாம்.

10-ம் அதிபதி மற்றும் சனி பலம் பெற்றால் நம்பிக்கையான, திறமையான வேலை ஆட்கள் கிடைக்கப் பெறுவதுடன், வேலையாட்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, அதன் மூலம் சம்பாதிப்பார்கள்.

யார் கூட்டுத் தொழில் செய்யக் கூடாது? 7-ம் இடம் கூட்டுத்தொழிலைப் பற்றிக் கூறும் இடம் என்பதால் 7-ம் அதிபதி 3,6,8,12-ல் மறைந்து பகை நீசம் பெற்று இருந்தால், பாதக ஸ்தான சம்பந்தம் இருந்தால், அவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நலம்.

உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனத்தை சேர்ந்தவர்களுக்கு 7-ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத் தொழில் பாதகத்தை தரும்.

ஒருவருடைய ஜாதகத்தில் 2,7,10-ம் பாவங்கள் சுபத்துவம் பெற்றால் கூட்டுத் தொழில் மூலம் ஜாதகருக்கு சமுதாய அந்தஸ்து புகழ், கவுரவம் ஆகியவைகள் கிட்டும்.

பரிகாரம்

ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் இடம் பலம் குறைந்து கூட்டுத் தொழிலால் சங்கடங்களை அனுபவிப்பவர்கள் 21 சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரையான நித்திய பிரதோஷ வேளையில் சிவ பெருமானுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button