Blog

Article : மகிழ்ச்சியே வாழ்க்கை!

அன்பின் வாழ்த்துகள் அன்பர்களே!

கண்களை அகல விரித்துக்கொண்டு. பற்கள் தெரிய வாயை நீள விரித்துச் செய்வதல்ல மகிழ்ச்சி. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சி என்பதே முகம் சார்ந்த செயல் அல்ல; அது அகம் சார்ந்த மலர்ச்சி. ஒரு பூவின் புன்னகை போன்றது மகிழ்ச்சி; அது இயல்பாக நடப்பது. எந்தவிதச் சிரமுமின்றிப் பூக்கள் மலர்வது போல நம் மனங்களில் மகிழ்ச்சி மலர வேண்டும்; அது நிறைந்த மகிழ்ச்சியாய் முகங்களில் படர்ந்து ஒளி வீசவேண்டும் மலர்களில் மணம் வீசுவதுபோல!.

மகிழ்ச்சி என்பதற்கு எளிமையான விளக்கம் கேட்டால், “மகிழ்ச்சியாக இருப்பதே மகிழ்ச்சி!” என்று பதில் கூறலாம்.

மகிழ்ச்சி என்பதன் பொருள் அறிய ராஜ ராஜ சோழன் ஒரு போட்டி அறிவித்ததாக ஒருகதை உண்டு. “உலகில் அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய பொருள் எது? அதனைக் கொண்டுவந்து அரண்மனைக் கொலு மண்டபத்தில் ஒரு மேடையில் வைத்துவிட வேண்டும்!. மிகப்பொருத்தமான பொருளை வைப்பவருக்கு 1000 பொற்காசுகளும் அரசாங்க வேலையும் வழங்கப்படும்!” என்று அறிவித்தார்.

மக்களில் சிலர் அவர்களின் கருத்துக்குத் தோன்றிய வண்ணம், சில பொருள்களைக் கொண்டுவந்து கொலு மண்டபத்தில் வைத்தனர்.

ஒருவர் கொலுமண்டப மேடையில் ஒரு சிறிய அளவுத் தங்கத்தை வைத்தார். தங்கமே மனிதர்க்கு மகிழ்ச்சி தரும் பொருள் என்று கூறாமல் கூறினார். ஏற்கனவே செல்வம் அதிகமுடைய பணக்காரர்களுக்கும் துறவிகளுக்கும் தங்கம் மகிழ்ச்சி தராது என அரசர் நிராகரித்துவிட்டார்.

ஒருவர் நல்லிசைக் கருவியான யாழைக் கொண்டுவந்து மேடையில் வைத்தார்; இசையே இதமான இன்பத்தை மனிதர்களுக்கு வழங்கக் கூடியது என்றார். காது கேளாதவர்களுக்கு இது நல்லின்பம் பயக்காது என ஒதுக்கிவைக்கப்பட்டது.

வாசமிகு வண்ணமலர்கள் ஒருவரால் மேடையில் அலங்காரமாக வைக்கப்பட்டன. கண்களுக்கும் நாசிக்கும் மகிழ்ச்சி தருவன மலர்கள் என எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் கண்பார்வை இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சிதர அவை பயன்படாது எனத் தள்ளிவைக்கப்பட்டது.

ஒருவர் இனிப்பான பல்வகைப் பலகாரப் பண்டங்களைக் கொண்டுவந்து மேடையில் வைத்தார். இனிக்க இனிக்க உண்பதே நாவிற்கும்,வயிற்றிற்கும், மனத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும் என்பது அவரது வாதம். ஆனால் நோயாளர்களுக்கு இது இன்பம் தருவதற்கு மாறாகத் துன்பமே தரும் என விலக்கி வைக்கப்பட்டது.

ஓர் அழகான சிற்பத்தை ஒருவர் கொண்டுவந்து மேடையில் வைத்தார். ஒரு பெரிய சிவலிங்க சொரூபம்; அதன்கீழே பசித்த ஒரு சிறுவனுக்கு ஒரு தாய் கனிவோடு உணவு ஊட்டி விடுவதுபோலச் சிற்பம் வடிவமைக்கப் பட்டிருந்தது. வருந்தும் சக உயிரினங்களுக்காக இரக்கப்படும் அன்பே தலைசிறந்த மகிழ்ச்சியைத் தரும் என்பது சிற்பம் கூறும் கருத்து என விளக்கப்பட்டது.

ஆம்! வறியவர், செல்வந்தர், துறவியர், கண்ணற்றவர், செவித்திறன் குறைந்தவர், மாற்றுத் திறனாளர், நோயாளர், சிறுவர், பெண்கள், ஆண்கள் என உலகின் எல்லாத் தரப்பினர்க்கும் மகிழ்ச்சியை வழங்க வல்லது அன்பு ஒன்றே! எனத் தீர்மானிக்கப்பட்டு அவருக்குப் பரிசும் வேலைவாய்ப்பும் ராஜ ராஜ சோழனால் நல்கப்பட்டதாம்.

அன்பு, கொண்டவர் மனத்தைக் கனிவிக்கிறது!; கொள்பவர் மனத்தை நெகிழ்விக்கிறது. அதனால் அன்புள்ளம் கொண்டோர் தாமும் எப்போதும் மகிழ்வாக இருக்கின்றனர். தம்மைச் சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றனர்.

மகிழ்ச்சியாக இருக்க அன்பு அடிப்படை என்றால், அந்த அன்புக்கு முதல்படி நமக்கு நாமே அன்போடு இருக்கக் கற்றுக்கொள்வது ஆகும். பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் அடுத்தவர்கள் மீது காட்டுவது மட்டுமே அன்பு என்று. ஆனால் அதற்கும் முதற்படியாக நம்மை நாமே நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

நம்மை நாமே நேசிக்கத் தொடங்கும் போது நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் அழகாக ஆகி விடுகின்றன. நமது எண்ணங்கள் செயல்கள் அழகாக அழகாகத் தாமாகவே நாமும் அழகாகி விடுகிறோம். நமது அழகும் நமது மகிழ்ச்சியும் நமது வாழ்வியலுக்கான தன்னம்பிக்கையை வழங்கி விடுகின்றன. எல்லாவற்றுக்கும் பணமே ஆதாரம் என்கிற போலியான கருத்துருக்கள் தவிடுபொடியாகி விடுகின்றன.

ஓர் அரசன், ஒருநாள் காலையில் ஒரு அரண்மனைச் சேவகனை அழைத்தான். “நான் எப்போது பார்த்தாலும் நீ பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் மகிழ்ச்சியாக வேலைசெய்து கொண்டிருக்கிறாயே! அது எப்படி?. நான் இந்த நாட்டுக்கு அரசன்; கடல்போல அரண்மனை! ஆயிரக்கணக்கில் வேலையாட்கள், லட்சக்கணக்கில் படை வீரர்கள்! கோடிக்கணக்கில் சொத்து பத்துக்கள்! எல்லாம் இருந்தும் என்னால் உன்போல மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லையே? ஏன்? உன் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன?” என்று கேட்டார்.

“அரசே! வணக்கம்! நான் தங்களது அரண்மனைச் சேவகன். தங்களது ஊதியத்திற்கேற்ற உழைப்பைத் தவறாது நாள்தோறும் செய்து விடுகிறேன். பெறுகிற சம்பளத்திற்குள் குடும்பம் நடத்தும் எளிய வாழ்க்கையைக் கற்றுகொண்டுவிட்டேன். நானும் என் மனைவியும் மக்களும் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க ஓர் ஓலைக்குடிசை உண்டு.அன்றாடம் குறைவில்லாமல் மூன்று வேளையும் எளிமையான உணவை உண்டு வருகிறோம். உடுத்தி மானம் மறைக்க ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று ஜோடி உடைகளும்

உண்டு. வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி தான். இரவு உறங்கப்போனால் உறக்கம் உடனே வந்து விடுகிறது!. இதுதான் என் மகிழ்ச்சியின் ரகசியம் “என்றான் அரண்மனைச் சேவகன்.

அரண்மனைச் சேவகனின் கூற்றை அமைச்சரை அழைத்து அப்படியே சொன்னார் அரசர். “அவன் அப்படியா சொன்னான்? அவனையும் நாளையே நமது வருத்தப்படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடுவோம்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அமைச்சர்.

“அது எப்படி முடியும்?” அரசர் கேட்டார்.

“பொறுத்திருந்து பாருங்கள் அரசே! இன்னும் ஒரு வாரத்திற்குள் அவன் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு என்ன பாடு படப்போகிறான் பாருங்கள்”. அமைச்சர் கிளம்பினார்.

அன்று இரவு, அந்த அரண்மனைச் சேவகனின் வீட்டு வாசலில் 99 பொற்காசுகள் இருக்கும் ஒரு சுருக்குப் பையைப் போட்டு விட்டு வந்தார் அமைச்சர்.

மறுநாள் காலை எழுந்து வீட்டு வாசலுக்கு வந்த சேவகன் வாசலில் ஒரு சுருக்குப்பை கிடப்பதைப் பார்த்தான். அவசரமாக எடுத்து வீட்டுக்குள் வந்து, உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தான். தங்க நாணயங்கள். எத்தனை என்று எண்ணத் தொடங்கினான்; அப்போது முதல் அவனது மகிழ்ச்சி தொலையும்காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டது.

நூறு தடவைக்குமேல் எண்ணிப் பார்த்துவிட்டான். காசுகள் 99 மட்டுமே இருந்தன.இருந்தால் நூறு காசுகள் அல்லவா இருந்திருக்க வேண்டும்; அந்த நூறாவது காசு எங்கே போயிற்று?. அன்று அரண்மனை வேலைக்குப் போகவில்லை. வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகளைக் கிளறத் தொடங்கினான்; சாக்கடைக்குள் இறங்கிச் சல்லடை போட்டு அலசித் தேடினான். அவனது வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தேடினான்.

இப்படியாகத் தேடி அலைவதிலேயே பத்து நாட்கள் கழிந்து போயின; சேவகன் அரண்மனைக்கு வேலைக்கும் போகவில்லை!. சேவகனின் நிலையை அரசனும் அமைச்சரும் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.

பத்துநாளுக்குப் பிறகு, இனிமேல் எப்படித் தேடினாலும் தொலைந்துபோன அந்தத் தங்கக் காசு கிடைக்காது என்கிற முடிவுக்கு வந்தான். அப்படியானால் அந்த 99 காசுகளை வைத்துக்கொண்டு அவன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினானா? என்றால் அதுதான் இல்லை.

அவன் புதிதாக ஒரு முடிவுக்கு வந்தான். இனிமேல் அரண்மனைச் சேவகம் தவிர மற்ற வேலைகளுக்கும் சென்று கடுமையாக உழைக்க வேண்டும். கிடைக்கிற பணத்தை வைத்து அந்த ஒற்றைத் தங்கக் காசை உருவாக்குகிற வரை சரியாக உண்ணவும் கூடாது; உறங்கவும் கூடாது! என்று முடிவெடுத்துவிட்டான்.

அவ்வளவுதான் அவனது நிலைமை அந்தோ பரிதாபம் என ஆகிவிட்டது. “பார்த்தீர்களா அரசே! அவன் இப்போது நமது வருத்தப்படுவோர் சங்கத்தில் எவ்வளவு தீவிரமான உறுப்பினனாக ஆகிவிட்டான் என்பதை!” கேட்டார் அமைச்சர். அந்தத் தங்க நாணயப் பையைப் பார்த்த நாளில் அந்தச் சேவகன் தொலைத்த மகிழ்ச்சியை இனி எந்த நாளிலும் மீட்டெடுக்கப் போவதே இல்லை.

பணம் இல்லையென்றால் தான் மனிதர்கள் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள் என்பதில்லை. பணம் இருந்தாலும் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. அந்த அரண்மனைச் சேவகன் இப்போது 99 தங்க நாணயங்களுக்கு அதிபதி என்றாலும், அவன் தேடி அலையும் அந்த ஒற்றை நாணயம் அவனைப் பிச்சைக்காரனாக மாற்றிவிட்டது. அதனால் அவனை விட்டு மகிழ்ச்சி தொலைதூரம் பயணப்பட்டுவிட்டது.

மகிழ்ச்சியாக இருக்க அன்பு வேண்டும் என்கிறோம். அந்த அன்பைச் செலுத்தப் பணம், காசு, நகை, வீடு, வாகனம் எனப் பலவகையான செல்வத் துணைகள் வேண்டும் என அலையத் தொடங்குகிறோம். வாழ்க்கை அலைவதிலேயே கழிந்து போகிறது. மகிழ்ச்சி என்பது துரத்தத் துரத்த எட்டிப்போகும் கானல்நீராய்க் கலைந்து போகிறது.

செல்வம் சேர்ப்பதற்கு எத்தனைவிதமான வழிகள் இருக்கின்றன? என்பதனைத் துருவித் துருவி ஆராய்ந்து முனைகிறோமே! என்றாவது அன்பு செலுத்துவதற்கும், அதன்மூலம் நிலைத்த மகிழ்ச்சியை அடைவதற்குமான வழிகள் என்னென்ன? என்று தேடியிருக்கிறோமா?

வீடுகளில் தாயாக அன்பு செலுத்துவது!,தந்தையாக அன்பு செலுத்துவது! கணவனாக அன்பு செலுத்துவது! மனைவியாக அன்பு செலுத்துவது! மகனாக அன்பு செலுத்துவது! மகளாக அன்பு செலுத்துவது! ஆசிரியராக அன்பு செலுத்துவது! மாணவராக அன்பு செலுத்துவது! மருத்துவராக அன்பு செலுத்துவது! நோயாளராக அன்பு செலுத்துவது! அலுவல்களில் அலுவலராக அன்பு செலுத்துவது! கோயில்களில் பக்தனாக அன்பு செலுத்துவது!….மொத்தத்தில் மனிதனாக அன்பு செலுத்துவது!…என அன்பு செலுத்தி மகிழ்ச்சி அடைவதற்கு வழிகள்தாம் எத்தனை? எத்தனை?.

எல்லா வழிகளும் மகிழ்ச்சி வழிகள்!

வலிகள் இல்லாத வாழ்க்கையின் வழிகள்!

பொருள்களில் இல்லை மகிழ்ச்சி!

மனிதங்களில் மலர்ந்திருக்கிறது மகிழ்ச்சி!

தொடர்புக்கு – 9443190098

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button