Blog

Article : மாமன்னர் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள்: "வெள்ளையனே வெளியேறு" என முதன்முதலில் வீர முழக்கமிட்டவர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் விடுதலைப் போராளிகள் முக்கியப் பங்காற்றினர். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய பல முக்கிய தலைவர்களின் தாயகமாக தமிழ்நாடு இருந்தது.

குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் தென்மாவட்டமான நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், ஒண்டிவீரன் என பல்வேறு வீரர்கள் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.

அந்த வரிசையில் இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்டவர் மாமன்னர் பூலித்தேவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரது 308-வது பிறந்தநாள் நாளை (1-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

மதுரையின் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இத்தகைய பாளையங்களில் ஒன்று தற்போதைய தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பாளையம் ஆகும்.

சித்திரபுத்திரத் தேவர்-சிவஞான நாச்சியாருக்கு மகனாக பூலித்தேவர் 1-9-1715-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தப்பப் பூலித்தேவர் என்பதாகும். ‘பூலித்தேவர்’என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கப்படுகிறார். சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய குல தெய்வமான (பூலுடையார் கோவில்) உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். பூலித்தேவர் 6 வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார். பூலித்தேவருக்கு 12 வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது.

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய 12 வயதில் அதாவது 1726-ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமா மகள் கயல்கண்ணி என்கின்ற லட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத்தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோவில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோவில் தவிர சங்கரன்கோவில், பால்வண்ணநாதர் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோவில், நெல்லை வாகையாடி அம்மன் கோவில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோவில் என்று திருநெல்வேலி சீமையில் உள்ள பல கோவில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார்.

திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை வழங்கினார்.

1750-ல் ராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கில கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டு பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டும் என்று அறிவிப்பை கொடுத்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்கு தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவன் வெற்றிபெற்றார் என பூலித்தேவன் சிந்து என்ற கதைப்பாடல் கூறுகிறது.

1755-ம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்சாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் ஆட்களான மாபூஸ்கானை தோற்கடித்தார்.

அதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியை தோற்கடித்தார். 1756-ல் நெல்லையில் மாபஸ்கானுடன் பூலித்தேவன் நடத்திய போரில் பூலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் வெட்டியதால் மனமுடைந்த பூலித்தேவன் போரை நிறுத்திவிட்டு திரும்பினார். அதனால் மாபஸ்கான் நெல்லையை தன் வசப்படுத்தினார்.

1765-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையை தாக்கிய காப்டன் பெரிட்சன் பூலித்தேவனிடம் தோற்றான். 1760-ம் ஆண்டு யூசுப்கான் நெற்கட்டும் செவல் கோட்டையை தாக்கிய போதும், 1766-ம் ஆண்டு கேப்டன் பவுட்சன் வாசுதேவநல்லூர் கோட்டையை தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766-ம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமை தளபதி பொறுப்பேற்றிருந்த கான்சாகிப்வால், பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன்பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார்.

அதன்பின் தலைமறைவானார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கிற வகையில் உதவவந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவன் ஏற்க மறுத்துவிட்டார். ஆங்கிலேயர் நெற்கட்டும் செவல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவனை பிடிக்க ஒரு நாட்டையே வளைக்ககூடிய அளவுக்கு பெரும் படையுடன் வந்தனர். 1767-ம் ஆண்டு மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், கேப்டன் ஹார்பர் ஆகியோர் வாசுதேவநல்லூர் கோட்டையை தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும், பூலித்தேவன் நிலைத்து நின்று போரை தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயரின் படை மற்றும் பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும், வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும், வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களை கொண்டு ஓட்டையை அடைத்து காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையை பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளை யங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோவிலில் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலத்துடன் கைவிலங்குகள் அறுந்து விழ ஜோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் பூலிசிவஞானம் ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

தற்போது நாட்டின் 77-வது சுதந்திர தினவிழாவை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், இந்திய சுதந்திரம் பெறுவதற்காக முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவனை நினைவு கூர்வோம்.

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button