Blog

Article : வாழ்த்தி… வாழ்வோம்!

அன்பின் வாழ்த்துகள் அன்பர்களே!

“ராஜாதி ராஜ! ராஜ கம்பீர! ராஜ மார்த்தாண்ட! ராஜகுல திலக! ராஜ பராக்கிரம! ராஜ வைராக்கிய!….” என நீளும் வரவேற்பு முழக்கங்களோடும் வாழ்த்து வாசகங்களோடும் ஆளும் அரசர்களை அரியணையில் அமர வைக்கும் காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். “நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” எனும் சிவ வாழ்த்துப் பாட்டைச் சிவன் கோவில்களிலும், “பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!”எனும் பாசுரங்களை வைணவ ஆலயங்களிலும் கேட்டிருப்போம். பெரும் பெரும் அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் பெயர்களைக் கூறி “வாழ்க! வாழ்க!” என ஒலிக்கும் வாழ்த்தொலிகளைச் செவி மடுத்திருப்போம். இதில் சிலர் “வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!” எனச் சுவரொட்டிகள் ஒட்டியும் ஒலி வாங்கிகள் பிடித்தும் தெரிவித்துக் கொண்டிருப்பதையும் அறிந்திருப்போம்!.

வாழ்த்துவதும் வாழ்த்துப் பெறுவதும் நல்ல பழக்கவழக்கம் தான். ஆனால் அது என்ன? “வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!”?.

வாழ்த்துவதற்கு எப்போதும் வயது ஒரு தடையே இல்லை. மூத்தவர்கள்தாம் வாழ்த்த வேண்டும்; இளையவர்கள் வாழ்த்தக்கூடாது என்றெல்லாம் கிடையவே கிடையாது. கடவுளை வாழ்த்துவதால் கடவுளா வாழப்போகிறார்?. இல்லை நாம் வாழ்த்தித்தான் கடவுள்கள் வாழ வேண்டிய கட்டாய நிலையிலா இருக்கிறார்கள்? கடவுளரை வாழ்த்துவதன் மூலம், வாழ்த்துகிற மனிதர்கள்தாம் வாழ்வார்கள். இதுவே பக்தியின் தத்துவம்.

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை; நல்ல நிறைவான மனமும் அப்பழுக்கற்ற சொற்களும் இருந்தாலே போதும். அடுத்தவர்களை வாழ்த்துகிற ஒவ்வொரு முறையும் அந்தத் தூய்மையான மன அதிர்வலைகள் மூலம் நாமும் வாழ்த்துகள் பெறுகிறோம். ஆசீர்வதிக்கப் பெறுகிறோம். இதுவே நிதர்சன உண்மை.

ஒரு சிறுநகரம். அதன் கடைவீதியில் ஓர் அளவான பலசரக்குக் கடை. கடைக்காரர் நல்லவர். அளவுக்கதிகமான லாபம் வைக்காமல் வியாபாரம் செய்து வந்தார். அவரது நல்லெண்ணத்திற்கு ஏற்ப வணிகமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. அந்தச் சிறுநகரத்தின் பெரும்பான்மை மக்களும் அவரது கடைக்கு வந்தே பலசரக்குகளை வாங்கிப் பயனடைந்து வந்தனர்.

அவரது கடை இருந்த வீதியில், அவரது கடைக்கு எதிர்த்தாற்போலத் திடீரென ஒரு பெரிய கட்டிடம் ஒன்று எழத் தொடங்கியது. அதிவிரைவாக அதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

பலசரக்குக் கடைக்காரரும் நாள்தோறும் அக்கட்டட வளர்ச்சியைக் கவனித்து வந்தாரேயொழிய, அது என்ன?ஏது? என்று அக்கறை கொள்ளவில்லை. ஒருநாள் அவரது கடைக்கு வந்த வாடிக்கையாளர் அவரிடம்,” இது என்ன கட்டிடம் தெரியுமா?” என்று கேட்டு விட்டுப்,” பெரிய பல்பொருள் அங்காடி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வரப்போகிறது!: இன்னும் பத்து நாளில் கடை திறக்கப்பட இருக்கிறது; இது வந்து விட்டால் உங்கள் கடை வியாபாரம் அதோ கதிதான்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

பலசரக்குக் கடைக்காரருக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. பக்கத்து ஊரில் உள்ள மலையில் வாழும் ஒரு துறவி அவருக்கு குருவாக உள்ளார். பெரும் சிக்கலான தருணங்களில் அந்தத் துறவியிடம் சென்று ஆலோசனை கேட்பதும், அதன்படி தப்பாமல் நடப்பதும் அவரது வழக்கம். மளமளவென்று கடையை அடைத்துவிட்டு, குருநாதரைச் சந்திக்கக் கிளம்பிவிட்டார். மலையில் இருந்த குருநாதரிடம், பல்பொருள் அங்காடி திறக்கப்பட இருப்பதையும், அதனால் தனது வியாபாரம் பாதிக்கப்பட இருப்பதையும் தெரிவித்துத், தனக்கு வழிகாட்டும்படி வேண்டினார். குருநாதரும் கொஞ்சநேரம் கண்களைமூடி தியானித்து விட்டு கடைக்காரரிடம் யோசனை ஒன்றைக் கூறினார்.

“நாள்தோறும் உனது பலசரக்குக் கடையைத் திறந்ததும் முதலில் நீ என்ன செய்வாய்?”

“கடையில் உள்ள சாமி படங்களுக்குப் பத்தி சூடம் காட்டி இன்றைய வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என வேண்டுவேன்!”

” நல்லது!. நாளைமுதல் நீ கடை திறந்து, பத்தி சூடம் காட்டிக் கடவுள்களைக் கும்பிடும் போது, எதிரே உள்ள பல்பொருள் அங்காடியிலும் வாணிபம் சிறப்பாக நடக்கவேண்டும் என வேண்டி, வாழ்த்தி, வழிபாடு நிகழ்த்து!” குருநாதர் சொன்னார்.

சுந்தர ஆவுடையப்பன்

” அப்படியே செய்கிறேன் குருவே!” குருநாதர் வார்த்தைக்கு இருவார்த்தை இல்லை எனக் கிளம்பிவிட்டார்.

மறுநாள் முதல் பலசரக்குக் கடைக்காரர் தன் கடையில் பத்தி சூடம்காட்டி, அப்படியே எதிர்க்கடைக்கும் காட்டி, வாழ்க! வளர்க! என வாழ்த்துச் சொல்லத் தொடங்கினார். சிலநாள்களில் பல்பொருள் அங்காடி கோலாகலமாய்த் திறக்கப்பட்டு, வியாபாரம் அமோகமாய் நடக்கத் தொடங்கியது. இவரது வாழ்த்தும் வழிபாடும் குருநாதர் சொன்னபடி தொடர்ந்துகொண்டே இருந்தது.

ஆறு மாதம் கழிந்தது. பலசரக்குக் கடைக்காரர் குநாதரைக் காண மலைக்குச் சென்றார். கடைக்காரைப் பார்த்ததும் குருநாதர் கேட்ட முதல் கேள்வி,

“என்ன பலசரக்குக் கடையை மூடிவிட்டாயா?”

இதற்குப் பலசரக்குக் கடைக்காரர் தந்த பதில்,

“இல்லை! எதிர்த்தாற்போல இருந்த பல்பொருள் அங்காடியை விலைக்கு வாங்கி விட்டேன்!”

இதுதான் வாழ்த்தின் மகிமை. உனது எதிரியையும் நீ வாழ்த்து! என்று நல்ல வார்த்தையை நம்பிக்கையில்லாமல் குருநாதர் சொல்லியிருக்கிறார்; அதனால்தான் இருந்த கடையையும் விற்றுவிட்டாயா? என்று அவர் கேட்டிருக்கிறார்.

ஆனால் குருநாதர் சொன்ன வாழ்த்தின் மகிமையை முழுமையாகக் கடைக்காரர் நம்பியதால் போட்டியாக வந்த வணிகத்தையும் தனதாக்கிக் கொள்ள முடிந்தது.வாழ்த்து சக மனிதத்தை அரவணைக்கும் ரசவாதத்தைப் புரிகிறது.

மற்றோரைப் பார்த்து நாம் பொறாமைப் படும்போது, நாம் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறோம்; ஏனெனில் ஏதோவொரு வகையில் அவர்கள் நம்மைவிட மேம்பட்ட நிலையில் இருப்பதாகக் கருதுவதாலேயே பொறாமை ஏற்படுகிறது. இதையே வாழ்த்தாக மாற்றிப் பாருங்கள்; நம் நிலைக்கு அவர்களைச் சமமாக்கிப் பார்க்கும் தன்னம்பிக்கை துளிர்ப்பதை மகிழ்வாக உணர முடியும். மேலும், வாழ்த்தும் குணம் வளர வளர நாமும் உயர்ந்து செழிக்கும் பெருமிதத்தை அடைய முடியும்.

வாழ்த்தும் எண்ணம் வளர்வதற்கு, நமது மனம் முழுவதும் அன்பால் நிறையும் நிறைவுக் குணம் பெருக வேண்டும். அன்புடன் பெருகிப் புறப்படும் வாழ்த்து, செல்லும் மனங்களிலெல்லாம் அன்பை நிறைத்துத் தீய குணங்களை அகற்றி விடுகின்றது. பொறாமைக் குணங்களோ தீயாகிப் பரவிக், கொண்டவர் மனத்தையும் கருக்கிக், கொள்பவர் மனத்தையும் கருகிடவே செய்கின்றன.

“வாழ்க!” என்பதற்கு எதிர்ச்சொல் “ஒழிக!”. பொதுநிலையில் ஒருமனிதருக்கு வாழ்க! முழக்கமும் கேட்கலாம்; ஒழிக! கோஷமும் ஒலிக்கலாம். இதில் வாழ்த்திற்கு மயங்கி, ஒழிகவுக்குக் கலங்கிடும் உள்ளங்களும் இருக்கவே செய்கின்றன.

ஒரு ராஜா. அவரை நல்லாட்சி நாயகர் என்றே மக்கள் மகிழ்ச்சியோடு அழைத்து வந்தனர். அவர் வாரத்தில் ஒரு நாள் அரண்மனையை விட்டுக் கிளம்பி, நகரத் தெருக்கள் வழியே நகர்வலம் வருவது வழக்கம். வருகின்ற வழியெங்கும், பொதுமக்களும், கடைக்காரர்களும் எழுந்து நின்று, மன்னர் வாழ்க! என மகிழ்ச்சியோடு குரல் எழுப்பி வணங்கி நிற்பர்.

ஒருநாள் நகர்வலம் முடித்து அரண்மனைக்கு வந்த கையோடு, ராஜா அமைச்சரை அழைத்து,

“அமைச்சரே! இன்று நகர் வலத்தில் ஒன்று கவனித்தீரா?”

“எதைப்பற்றி அரசே!”

“நாம் நகர்வலம் வந்து கொண்டிருந்தபோது, வழியில் நின்றிருந்த மக்கள் எல்லோரும் வாழ்க! வாழ்க! என்றார்கள். கடைகளில் இருந்த வணிகர்கள், கடையை விட்டு வெளியே வந்து மகிழ்ச்சியோடு வாழ்க! சொன்னார்கள்!”

“ஆமாம்! சொன்னார்கள்!”

“ஆமாம்! வணிகர்களில் ஒரே ஒருவரைத் தவிர எல்லாரும் வாழ்த்தினார்கள்!”

“என்ன சொல்கிறீர்கள் அரசே! ஒரே ஒருவர் வாழ்க! சொல்லவில்லையா?”

“ஆம்! அமைச்சரே! அந்தச் சந்தனக்கட்டை வணிகம் செய்பவர்தான் என்னைப்பார்த்து, வணங்கவும் இல்லை! வாழ்த்தவும் இல்லை! மாறாக உம்மென்று சோகமாக நின்றுகொண்டு மனத்திற்குள் ஒழிக! ஒழிக! என்று சொல்லிக் கொண்டு இருப்பது போலவும் தோன்றியது!”.

“அப்படியா? அரசே! இப்போதே கடைவீதிக்குச் சென்று, அவரிடம் விசாரணை மேற்கொண்டு விவரம் அறிந்து வருகிறேன்!”-அமைச்சர் விடைபெற்றார்.

ஒருமணிநேரம் கழித்து அரண்மனைக்குத் திரும்பிய அமைச்சர் நேராக அரசரிடம் சென்று பணிந்து நின்றார்.

“என்ன அமைச்சரே! காரணம் அறிந்து வந்தீரா?

“ஆம் அரசே! காரணம் அறிந்து எல்லாவற்றையும் சரி செய்து விட்டும் வந்து விட்டேன்.”

“விஷயம் இவ்வளவுதான் அரசே!. அந்தச் சந்தனக்கட்டை வியாபாரி இன்றுமட்டுமல்ல, இதற்குமுன் எப்போது நீங்கள் நகர்வலம் போனாலும் இதேபோலச் சோகமாகத்தான் இருப்பானாம். இன்று தான் உங்கள் கண்ணில் அவன் சிக்கியிருக்கிறான்.”

“அவன் பார்த்து வருவது சந்தனக்கட்டை முதலான பல வாசனைக்கட்டைகளின் வியாபாரம். இவற்றின் வணிகம், மற்றெந்தப் பொருள்களையும்போல எப்போதும் சிறப்பாக நடப்பதில்லை. இதற்குமுன் நல்ல வியாபாரம் என்பது உங்கள் தந்தை மகாராஜா இறந்தபோதுதான் நடைபெற்றதாம். அவரது உடலை எரியூட்டப் பல லட்சக்கணக்கில் வாசனைக்கட்டைகள் விற்றுத் தீர்ந்தனவாம். அதன் பின் நல்ல வியாபாரம் என்பது நீங்கள் இறந்தால்தான் நடைபெறும் என்பது அவனது எதிர்பார்ப்பு. அதனால் தான் ஒவ்வொருமுறை நீங்கள் நகர்வலம் வரும்போதும் சோகத்தோடும் ஏக்கத்தோடும் உங்களை வாழ்த்தாமல், உங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.”

“ஆனாலும் அவனது சோகத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்துவிட்டேன். இந்த வாரத்தில் வரவிருக்கும் உங்களது பிறந்த நாளை மக்கள் தெருமுனைகளில் சந்தனக்கட்டைகள் கொளுத்தி நகரெங்கும் சந்தனப்புகை கமழக் கொண்டாட வேண்டும்! எனப் பறை அறிவிக்கச் செய்துவிட்டேன்.

“இனி ஆண்டுக்கொருமுறை சந்தனக்கட்டை அமோகமாக விற்பனையாகும். நகர்வலத்தில் மன்னரைப் பார்க்கும் போதெல்லாம் ‘எப்போது சாவார்!’ என்று ‘ஒழிக!’ சொல்லிக்கொண்டிருந்த சந்தனக்கட்டைக் கடைக்காரர்,’அரசருக்குப் பிறந்த நாள் ஆண்டுதோறும் வரட்டும்! வாழ்க! வாழ்க! பல்லாண்டு!’ என வாரந்தோறும் வாழ்த்தவும் தொடங்கி விடுவார்!” என்றார் அமைச்சர்.

எந்தப் பிரச்சினையையுமே நேர்முறையாக எடுத்துக்கொண்டு, அதனை நேர்முறையில் தீர்த்துவைத்த இந்த அமைச்சரின் செயல் கவனிக்கத்தக்கது. ஒருவகையில் வாழ்க! என்பதும், ஒழிக! என்பதும் ஒன்றுபோலவே ஆகிவிடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

“வாழ்க!” நம்மை மகிழ வைக்கிறது!

“ஒழிக!” நம்மை உணர வைக்கிறது!

வாழ்த்த வாழ்வோம்!

வாழ்த்தி வாழ்வோம்!

தொடர்புக்கு – 9443190098

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button