Blog

Article : மீனா மலரும் நினைவுகள்: சிவந்த காதும்… வந்த கோபமும்…

ஆ… அம்மா…

என்று கதறி அழுத சத்தம் கேட்டு படப்பிடிப்பு தளத்தில் ஆங்காங்கே நின்றவர்கள் எல்லாம் என் அருகில் ஓடி வந்தார்கள்.

‘பாப்பா… என்னம்மா ஆச்சு?’ என்று எல்லோரும் பதற்றத்துடன் கேட்டார்கள்.

ஆனால் பதில் சொல்ல முடியாமல் நான் எனது இடது காதை பொத்தியபடி அழுது கொண்டிருந்தேன்.

சிலர் என் கையை விலக்கி காதை பார்த்து என்னம்மா… ஏதாச்சும் கடித்துவிட்டதா? என்று கரிசனத்துடன் கேட்டார்கள்.

இந்த களேபரத்துக்கு இடையே எனது அழுகை சத்தம் கேட்டு அம்மாவும் அங்கே ஓடி வந்தார்.

அம்மாவை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து அழுதேன். அவர் என்னை வாஞ்சையுடன் தடவி என்னம்மா… என்ன ஆச்சு என்றதும் காதை பிடித்து காட்டினேன்.

ரத்த சிவப்பாக சிவந்து போயிருந்த காதை பார்த்து அதிர்ச்சியில் ‘என்னம்மா என்ன ஆச்சு…?’ என்றார்.

நான் பதில் சொல்லாமல் அழுது கொண்டே சற்று தூரத்தில் கைகாட்டினேன். அங்கு மூத்த கலைஞரான நடிகர் சந்திரமோகன் நின்று கொண்டிருந்தார்.

அவருக்கு ஒரு பழக்கம். யாரை பார்த்தாலும் ஜாலியாக பின்புறமாக சென்று காதில் சுண்டுவார். பெரியவர்கள் என்றால் பரவாயில்லை. அதை தாங்கி கொள்வார்கள்.

எனக்கு தாங்கும் வயதா? பச்சை குழந்தை நான். பிஞ்சு காது. அவர் சுண்டியதும் ‘சுர்…சுர்’ என்று வலித்தது. ரத்தமாக சிவந்து போனது.

அதை பார்த்து அம்மாவும் அவரிடம் சண்டை போட்டார். யாரிடம் எப்படி விளையாடுவது என்று தெரிய வேண்டாமா? என்று கடிந்து கொண்டார்.

அவரும் இவ்வளவு வலிக்கும் என்று நினைத்திருக்கமாட்டார். பழக்க தோஷத்தில் சுண்டிவிட்டார். அப்புறம் ‘சாரி’ கேட்டார்.

தெலுங்கில் கே.விசுவநாத்தின் ‘சிரிவெல்லா’ என்ற படத்தில் பார்வையற்ற குழந்தையாக நடித்தேன்.

பார்வை மட்டும்தான் தெரியாது. கண்கள் திறந்தேதான் இருக்கும். ஆனால் பார்வை தெரியாதது போல் நடப்பேன். டான்ஸ் ஆடுவேன். இப்போது அந்த படத்தை பார்க்கும் போதும் பரவாயில்லையே நல்லாத்தான் நடித்து இருக்கிறோம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டு கொள்வேன்.

என்னை எப்போது எங்கு பார்த்தாலும் ‘என்னடா… எப்படி இருக்கே?’ என்று பாசத்தோடு பேசக் கூடியவர் விஜயகுமார் அங்கிள். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்.

அப்படிப்பட்டவர் என்னை அருகில் வராதே போ என்று விரட்டினால் எப்படி இருக்கும்? அதுவும் சினிமா காட்சிக்காகத் தான்.

இருந்தாலும் அதை சினிமாதானே என்று எடுத்துக் கொள்ளும் மனநிலை அந்த வயதில் எனக்கு இருந்திருக்குமா? என்பது கேள்விக்குறியே.

அதனால்தானோ என்னவோ அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ‘உயிரே உனக்காக’ என்ற படத்தில் விஜயகுமார் அங்கிள், மோகன்சார், நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.

அந்த படத்தில் விஜயகுமார் அங்கிள் மகள் நதியாதான். அதில் சின்ன வயது நதியாவாக நான் நடித்தேன். மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. கதைப்படி அம்மா இறந்து போவார்.

தனிமையில் நான் ஒரு நாள் இரவு என் அறையில் தூங்கும் போது வெளியே பயங்கர இடி-மின்னல். அதை பார்த்து பயந்து அலறுவேன். என் அறையில் இருந்து வெளியே வந்து பக்கத்து அறையில் தூங்கும் விஜயகுமார் அங்கிளை எழுப்பி ‘டாடி… பயமாக இருக்கு டாடி… உங்களோடு படுத்துக்கிறேன்’ என்பேன்.

ஆனால் அவர் ‘இங்கெல்லாம் வரக்கூடாது. போ… என்று பிடித்து தள்ளி விடுவார்…’ நான் பயந்து அழுது கொண்டே செல்வேன்.

எட்டு வயதில் காமிரா முன்பு நிற்க தொடங்கிய எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வயதிற்கே உரிய அனுபவம் அதிகரித்து வந்ததாகவே உணர்கிறேன்.

குழந்தை நட்சத்திரமாக இருந்ததால் ஆரம்பத்தில் பலமுறை அப்படி நில், இப்படி நில் என்று டைரக்டர் சொல்லித் தருவார். கொஞ்சம் அனுபவம் வந்ததும் ஒருமுறை சொன்னதுமே அதை அப்படியே உள்வாங்கி செய்யும் அளவுக்கு வளர்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதனால்தான் ஒரு கட்டத்தில் காட்சிப்படி நல்லா நடிக்கிறாள் என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நடிக்க முடிந்தது.

அதனால்தான் குழந்தை நட்சத்திரம் தேவை என்றதுமே மீனாவை பார்க்கலாமே என்று எல்லோரும் தேட தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வகையில் இதுவும் எனக்கு கடவுள் தந்த வரமே.

அடுத்தடுத்து படங்கள்… அதனால் படிப்புதான் என்ன ஆகுமோ என்று அம்மா பயப்பட்டார். யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு 40-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டேன். அந்த காலகட்டத்தில் மணிரத்னம் சார் டைரக்ஷனில் நாகார்ஜூனா நடித்த படம் ‘இதயத்தை திருடாதே’. இந்த படத்தில் 3 குழந்தைகள் கதாபாத்திரம் வரும். அதில் ஒரு குழந்தை பாத்திரத்தில் நடிக்க என்னை தேடி வந்தார்கள்.

20 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் அப்போது எனக்கு பரீட்சை நேரம். எனவே படிப்பு கெட்டுப்போகும் என்று அந்த படத்தில் நடிக்கவில்லை. இதனால் அப்போது மணிரத்னம் சார் டைரக்ஷனில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது.

இருந்தாலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட வேண்டிய தாயிற்று. ஏனெனில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது.

எனவே இதுவரை உங்கள் குழந்தை மீனா அடுத்த வாரம் முதல் கதாநாயகியாக உங்களை சந்திக்க வருகிறேன்.

(தொடரும்)

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button